டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் அவர்களின் மறைவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஷீலா தீட்சித், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராக பணியாற்றியவர். மூன்று முறை டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்த ஷீலா தீட்சித் நிர்வாகத் திறமை மிகுந்தவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.


டெல்லி வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய அவர், கேரள மாநில ஆளுநராகவும் பணியாற்றினார். காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.