இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து சமீபத்தில் திரும்பப்பெற்றது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வணிக ரீதியிலான உறவை துண்டித்தது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதரையும் திருப்பி அனுப்பியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
 
இதனிடையே பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி, காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு இழைக்கும் அநீதிக்கு  இந்திய ராணுவத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் துணைபோகக் கூடாது என குறிப்பிட்டார். மேலும், காஷ்மீரில் பாதுகாப்பு வீரர்களாக ராணுவத்தில் பணியமர்த்தப்படுவதை பஞ்சாபை சேர்ந்தவர்கள் மறுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்., "இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்றது அல்ல. இந்திய ராணுவம் மிகவும் ஒழுக்கமும், தேசப்பற்றும் கொண்டது. உங்கள் ஆத்திரமூட்டும் அறிக்கையையும், பிளவுபடுத்தும் கட்டளைகளும் இந்திய ராணுவத்திடம் வேலை செய்யாது. காஷ்மீர் இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். ஆகையால் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்." என எச்சரித்துள்ளார்.