மக்களவைத் தேர்தலுக்கு 48 மணி நேரம் உள்ள போது அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடைசி நிமிடத்தில் வாக்காளர்களைக் கவர்வதற்கான அதிரடித் திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதைத் தடுக்கும் விதமாக வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் உள்ள போது தேர்தல் அறிக்கையினை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்புதான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் அப்போது புகார் அளிக்கப்பட்டது.


எனினும் தேர்தல் நடத்தை விதிகளில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கான காலவரம்பு எதுவும் இல்லை என்பதால் பாஜக-வின் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. 


இந்நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் இந்த விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்ட தேர்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.