மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
ஏஎன்ஐ, புது டெல்லி, லோக்சபா தேர்தல் 2024. மக்களவைத் தேர்தலையொட்டி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசுவது வழக்கம். தற்போது சொத்துப் பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. அதுவும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாய் திறந்தாலே காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தி வாய் திறந்தாலே பிரதமர் மோடி குறித்து தான் பேசுவார்கள். இவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த தேர்தல் பேரணிகளில், இந்திய பிரதமர் மோடியை காங்கிரஸ் குறிவைத்து தாக்கி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவை கடுமையாக தாக்கி வருகிறது.
இரு கட்சிகளும் ஏப்ரல் 29க்குள் பதிலளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மதம், ஜாதி, சமூகம் மற்றும் மொழியின் அடிப்படையில் வெறுப்பு மற்றும் பிளவை உருவாக்கும் விதமாக பேசுவதாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் குற்றம் சாட்டின. இது தொடர்பாக இருவரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
அரசியல் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும் தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77வது பிரிவை மேற்கோள் காட்டி கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை, குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார நடத்தைக்கு அரசியல் கட்சிகள் தான் முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நாற்காலிக்காக துடிக்கிறது -பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
பிலிபிட் பேரணி பேசிய பிரதமர் மோடி பேசியது: ஏப்ரல் 9 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் நடந்த தேர்தல் பேரணியின் போது, பிரதமர் மோடி, இந்து தெய்வங்கள், இந்து வழிபாட்டுத் தலங்கள், சீக்கியர்களின் புனிதத் தலங்கள், சீக்கிய குருக்களின் பெயர்களில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் ஜோண்டேல் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும் எனக் கூறியிருந்தார். மேலும் பிரதமர் மோடி தனது உரைகளில் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பிலிபித் பேரணியில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதை மதத்தின் அடிப்படையில் வாக்குக் கேட்பதாகக் கருதவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் பேரணியை பேசிய பிரதமர் மோடி பேசியது: சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் சொத்துப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு முஸ்லிம் சமூகம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி என பிரதமர் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
நாட்டில் தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் மாநில அடிப்படையில் வடக்கு மற்றும் தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார் என்று பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் தான் தற்போது ராகுல் காந்தியும் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ