தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதம், 8.6 சதவீதமாக குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். 


கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 8.8 சதவீத வட்டி வழங்க, பி.எப்., அமைப்பு முன் வந்தது; ஆனால், 8.7 சதவீதமாக அதை, நிதி அமைச்சகம் குறைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 8.8 சதவீத வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான, வட்டி விகிதம் குறித்து தற்போது ஆலோசனை நடக்கிறது. 'நடப்பு நிதியாண்டிற்கு, 8.6 சதவீத வட்டி வழங்கலாம்' என, பி.எப்., அமைப்பும், நிதி அமைச்சகமும் இறுதி செய்துள்ளதாக, நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.