பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்த பாராதிய ஜனதா கட்சி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது. 


எனவே புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பாஜக விரும்பியது. ஆனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் முத்த மந்திரிகளான ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழு எதிர்க்கட்சியினரை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் எதிர்க் கட்சி தலைவர்கள் தாங்கள்(பாஜக) வேட்பாளரின் பெயரை அறிவித்த பிறகு, நாங்கள் முடிவு எடுப்போம் என தெரிவித்தனர்.


பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொண்ட பிறகு தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், நேற்று பா.ஜ.க.வின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிந்ததும், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் நேற்று திடீரென்று அறிவிக்கப்பட்டது.


இதை அதிகாரபூர்வமாக அமித்ஷா அறிவித்தார். பிறகு இதைக்குறித்து நிருபர்களிடம் பேசியதாவது:-


ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. 


காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகள் மற்றும் பல்வேறு யோசனைகள், அம்சங்களை கருத்தில் கொண்டு அவரை வேட்பாளராக தேர்வு செய்து இருக்கிறோம்.


இதுபற்றி பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுடைய ஆதரவை கேட்டு இருக்கிறார் என அமித்ஷா தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.