முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரதமர், முன்னாள் பிரதமர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.   அது மட்டுமின்றி  கொலை மிரட்டல் உள்ள பல தலைவர்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் மனைவி,  காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் முதன்மையானவர்கள் ஆவார்கள்.


இந்நிலையில், தற்போதைய மத்திய பாஜக அரசு இந்த சிறப்பு பாதுகாப்பை  முழுவதுமாக விலக்குவதற்கு பதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இது குறித்து ஆலோசித்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.  இந்த உத்தரவு கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.   இதையொட்டி நேற்று சிறப்பு பாதுகாப்பு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை நீக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து, உளவுத்துறையினர், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக ஆலோசித்து மன்மோகன்சிங்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்புக் குழுவான சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பை திரும்பப்பெற உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு அளித்து வரும் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு தற்போது, 3,000 வீரர்கள் கொண்ட எஸ்பிஜியின் பாதுகாப்பு பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டுமே நீடித்திருக்கும்.