புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (Farooq Abdullah) பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், தற்காலிகமாக அவரது வீடு துணை சிறையாக அறிவிக்கப்பட்டு, அங்கு அவர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளார் என்றும், அவர் தனது உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு நபரை கைது செய்தால் எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


இதை தொடர்ந்து, ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, ஆகஸ்ட் 5 முதல் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில் பாரூக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


சமீபத்தில், தேசிய மாநாட்டு எம்.பி.க்கள் ஃபாரூக் மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சந்திப்புக்குப் பிறகு, ஊடகங்களுடன் பேசக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டது.