இனி வாகனங்களில் சரக்கு எடுத்து செல்ல E-Way Bill கட்டாயம்!
சரக்கு போக்குவரத்தில் மின்னணு பில் முறை அறிமுகம். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச்செல்வதற்கு E-Way Bill எனப்படும் மின்னணு ரசீது கட்டாயம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்தை கையாளுவது, சரக்குகளுக்கான வரியை செலுத்துவது ஆகியவற்றில் தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும் மின்னணு முறையில் ரசிது (E-Way Bill) செலுத்தும் நடைமுறையை அமல்படுத்துவது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் தீவிரமாக பரிசீலித்து வந்தது.
அதன்படி, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்குகளை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை மின்னணு பில் முறையில் கொண்டு செல்ல முடியும். இந்தநிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 24-வது கூட்டம் அதன் தலைவரான மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்னணு பில் முறையை வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு பில் முறையை பரீட்சார்த்த முறையில் வருகிற ஜனவரி 16-ந் தேதி முதல் அமல்படுத்த தீர்மானித்து இருப்பதாகவும், மாநிலங்கள் அதற்கான ஒருங்கிணைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மின்னணு பில் முறையை ஜூன் 1-ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.