CBI இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு இணையாக சிறப்பு இயக்குநர் என்ற பதவியில் ராகேஷ் அஸ்தானாவை மத்திய அரசு நியமித்தது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல், ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்தது. இதனையடுத்து இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து, கட்டாய விடுமுறையில் உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, CBI இயக்குநராக நீடிக்கலாம் என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் விடுப்பபுக்கு பின்னர், நேற்றைய முன் தினம் அவர் மீண்டும் CBI இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார்.


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து CBI இயக்குநர் பதவிக்கு திரும்பிய அலோக் வர்மா, தனது ஆதரவு அதிகாரிகளை இடமாற்றி இயக்குநர் பொறுப்பு வகித்த நாகேஷ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் அவர் இடமாற்றம் செய்தார். 


இந்நிலையில், அலோக் வர்மவை நீக்குவது குறித்து, டெல்லியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பங்கேற்ற நீதிபதி A.N.சிக்ரி அடங்கிய  மூவர் குழுவின் ஆலோசனை நடைபெற்றது. அலோக் வர்மா நீக்கத்திற்கு மல்லிகார்ஜூன கார்கே, எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெரும்பான்மை முடிவு என்கிற வகையில், CBI-யின் இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மாற்றுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.


பிறகு CBI இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு, தீயணைப்பு துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். வருகிற 31 ஆம் தேதி அன்று பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் CBI இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டார்.


இதனையடுத்து, இன்று சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.