மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் அரசியல் பயணம்...
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் காலமானார்!!
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் காலமானார்!!
கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, புதுடெல்லியில் அருண் ஜெட்லி பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த போது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தில் மாணவ போராளியாக இருந்தார்.
அதன்பிறகு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பதவி வகித்தார். இந்திரா காந்தி ஆட்சியில் 1975 - 77 காலக்கட்டத்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது, ஜெட்லி சிறைவாசம் சென்றார். 1977ல் லோக்தந்திரிக் யுவ மோர்ச்சாவில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அப்போது டெல்லி ஏபிவிபி-க்கு தலைவராகவும், ஏபிவிபி-யின் அகில இந்திய செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1980ல் பாஜகவில் இணைந்தார். அதே ஆண்டு பாஜகவின் இளைஞர் அணி தலைவராகவும், டெல்லி பாஜக செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1991ல் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார். 1998ஆம் ஆண்டு இந்திய அரசின் பிரதிநிதியாக ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் முதல்முறையாக வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக் கட்டிலுக்கு வந்த போது, அக்டோபர் 13, 1999ல் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். முதலீடுகள் தொடர்பான கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில், தனி அமைச்சகம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது. அதற்கு இணை அமைச்சராக (Independent Charge) அருண் ஜெட்லி நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2000ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஜூலை 23, 2000ல் சட்டம், நீதி, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார். நவம்பர் 2000ல் கேபினட் அமைச்சராக உயர்ந்த போது, சட்டம், நீதி, நிறுவன விவகாரங்கள் துறை, கப்பல் கட்டுமான துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜூலை 2002ல் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் ஜனவரி 2003 வரை, அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். அதே ஆண்டு வர்த்தகம், தொழிற்துறை மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதையடுத்து 2006ல் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஜூன் 3, 2009ல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2012ல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்வானார்.
குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த காலத்தில் இருந்தே, அருண் ஜெட்லி அவருடன் நல்ல நட்புடன் இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் காரணமாக, குஜராத்தில் இருந்த அமித் ஷா டெல்லியில் தங்க நேரிட்டது. அப்போது அருண் ஜெட்லி தான் அமித் ஷாவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பல சமயங்களில் ஜெட்லியின் வீட்டில் தான் அமித் ஷா மதிய உணவு உண்பார்.
இந்த நட்பின் அடையாளமாகத் தான், மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போது, ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் வாரி வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றார். மே 2014 முதல் மே 2019 வரை, நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.
இதற்கிடையில் 2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார்.