வாக்குறுதிகளை காப்பாற்ற பாஜக மறந்துவிட்டது -மன்மோகன் சிங்!
இந்நாட்டின் பிரச்சனைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்!
புதுடெல்லி: இந்நாட்டின் பிரச்சனைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் எழுதியுள்ள ஷேர்ஸ் ஆஃப் ட்ரூத் - ஜர்னி டிரைல்டுஸ் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். அப்போது இந்நாட்டின் பிரச்சனைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என குறிப்பிட்டுள்ளார்!
இந்நிகழ்ச்சியில் அவர் மேலும் தெரிவித்ததாவது...
"விவசாயிகளுக்கு உரிய உற்பத்தி விலையினை மத்திய அரசு பெற்றுத் தரவில்லை, கடந்த நான்கு வருடங்களில் மோடி அரசு செயல்பட்ட விதம் குறித்து கபில் சிபலின் புத்தகம் முழு விளக்கம் அளிக்கும்.
2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வில்லை என்பதினை இந்த புத்தகம் விளக்கும்.
2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, பிரதமரின் வாக்குறுதியில் ஒரு வருடத்திற்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால் நான்கு வருடங்ள் கழிந்தும் இளைஞர்களுக்கான வாக்குறுதி கேள்விகுறி தான்.
ஆனால் இதை மறைக்கும் வகையில் மத்திய அரசு போலி புள்ளி விவரங்களை மக்களுக்கு காண்பித்து வருகின்றது. இந்த புள்ளி விவரங்களை பார்த்து மக்கள் மயங்கவில்லை.
கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டுவர இந்த அரசு உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. GST என்னும் மிக மோசமான வரிவிதிப்பு மக்களை வாட்டி வருகின்றது.
Make In India, StandUp India திட்டங்கள், அதன் பலனை இன்னும் கொடுக்கவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளது." என ஆளும் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்!