காஷ்மீருக்கு சென்ற குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்டு, டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காகவும், காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் நேற்று காஷ்மீருக்கு விமானத்தில் சென்றார்.


அவருடன் காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்ரும் சென்றார். இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரை இறங்கினர்.


அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல், அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். பின்னர் குலாம் நபி ஆசாத்தை வேறு விமானத்தில் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.


டெல்லிக்கு வந்து சேர்ந்த குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில், காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை என்னை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். வீட்டுக்கு செல்லவோ, கூட்டத்துக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை. பிறகு டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.


தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, உலக புகழ்பெற்ற காஷ்மீரை அழித்து விட்டது.  இதற்காக ஒவ்வொரு காஷ்மீரியிடமும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை குலாம் நபி ஆசாத் விமர்சித்திருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.