ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த நான்கு இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 4-ஆம் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’ பயணித்தது. அப்போது ஜிப்ரால்டர் காவல்துறையினர், அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர்.


ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறைபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. கப்பலில் பயணித்த 28 பேரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். கேப்டன், தலைமை அதிகாரி, 2 ஊழியர்கள் என 4 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


இதனிடையே தங்கள் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்று ஈரானும், கப்பல் ஊழியர்களும் மறுத்து பார்த்தனர். ஆனால், ஜிப்ரால்டர் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.


இங்கிலாந்து அரசை தொடர்பு கொண்ட ஈரான், தங்கள் கப்பலை விடுவிக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. எனினும், இந்த விவகாரத்தை ஜிப்ரால்டர் அரசுதான் கையாள்வதாக இங்கிலாந்து கூறிவிட்டது. இதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.


இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 4 இந்திய ஊழியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியர்கள் நால்வரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.