கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா முதல்வராக பதவி வகித்து வரும் மனோகர் பாரிக்கர், கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். 


இந்த நிலையில் தற்போது மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதற்கிடையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. பாஜக-விற்கு பெரும்பான்மை இல்லை எனவும், தங்கள் கட்சியை ஆட்யமைக்க அழைக்குமாறும் கூறி காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஆளுநர் மிருதுளா சின்காவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


சமீபத்தில் பாஜக MLA பிரான்ஸிஸ் டி சோசா மரணம் அடைந்தார். இவரது மறைவையடுத்து பாஜக-வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் தற்போது கோவா முதல்வர் உடல்நிலை சற்று மோசமான நிலையினை எட்டியுள்ள இக்கட்டான நிலையில் மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது.


இந்த இக்கட்டான சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். மனோகர் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல் மந்திரி யார் என்பதை இந்த சந்திப்பில் முடிவு செய்யும் பணியில் பாஜக மூத்த நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்று பரவலாக தகவல்கள் பரவுகின்றன. 


இதனையடுத்து இன்று மாலை பாஜக MLA-க்களின் கூட்டம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், MLA-க்களில் ஒருவரை மட்டுமே புதிய முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று கோவா மாநில பாஜக MLA-க்கள் அக்கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கோவா அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.