கோரக்பூர் சம்பவம்: எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய காபீல் கான்!!
துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் காபீல் கான்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணையை நடைபெற்று வருகிறது.
ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் பணத்தை சரியான நேரத்தில் செலுத்தாததால் கடந்த 4-ம் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை தனியார் நிறுவனம் நிறுத்தியது.
இந்நிலையில் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு பலமுறை அழைப்பு விடுத்து உள்ளார். ஆனால் தனியார் நிறுவனம் பணம் செலுத்தினால் மட்டுமே ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடியும் என கூறியுள்ளது.
ஆனால், காபீல் கான் பின் வாங்கவில்லை. தன்னுடன் உதவியாளர்களை தனது காரில் அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாக பெற்று உடனடியாக மருத்துவமனை திரும்பி உள்ளார். உடனே ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மத்திய ஆக்ஸிஜன் குழாயில் இணைத்து உள்ளார்.
இந்த 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படும் என்ற நிலையில், மீண்டும் தனது காரை எடுத்துக் கொண்டு தனக்கு தெரிந்த மருத்துவமனைகள் மூலம் 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சில மருத்துவமனை ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கு பணம் கேட்டனர். தன்னுடைய பணத்தை செலவழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்துள்ளார்.
இதன்மூலம் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் காபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார். இவர் மட்டும் சரியான நேரத்தில் துரிதமாக பணியை செய்யவில்லை என்றால், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாகியிருக்கும், இவரால் தான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது இவர் எப்போதும் எல்லோருடைய மனதிலும் நிற்பார் என கண்ணீர் மல்க பொற்றோர்கள் கூறினார்கள்.