ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தலை அடுத்து அமர்நாத் யாத்திரையை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. யாத்திரிகள் பயண செய்யும் வழியில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களின் படி, காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.


ஆதாரங்களின்படி, அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் வழியில், ஷேஷ்நாக் அருகே மனித இலக்குகளைத் தாக்கப் பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த கிளேமோர் மீட்கப்பட்டது என்றும், இந்த கிளேமோர் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில் ஜம்மு-காஷ்மீரில் முதன் முறையாக கிளேமோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதனால் அமர்நாத் யாத்திரையை முடித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், உடனடியாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.


இந்த கிளைமோர் (M18A1 Claymore Antipersonnel Mine) என்பது மறைந்திருந்து மனித இலக்குகளைத் தாக்கவும், படைவீரர்களை தாக்குவதற்கென்று  பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதை சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.


சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.