ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 பேர் காயம்!
ஜம்மு மற்றும் காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இராணுவ வீரர் மகள் உட்பட 3 பேர் காயம்.
ஜம்முவின் புறநகர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமிற்குள் வீரர்களுக்கான தங்கும் இடம் பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இன்று அதிகாலை 4.45 மணியளவில் ராணுவ மையத்திற்குள் பயங்கரவாதிகள் சுற்றித்திரிவதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் கண்டனர். திடீரென வீரர்களின் குடியிருப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காயம் அடைந்தவர்களில் ஒருவர் ராணுவ வீரரின் மகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதிகள் எவ்வாறு ராணுவ முகாமிற்குள் நுழைந்தனர் என்ற விவரம் சரிவர தெரியவில்லை என்றும் விசாரணை தொடங்கியிருப்பதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று உளவுத்துறை ஏஜென்சி தெரிவித்துள்ளது.