IAF விமானிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்
ஒன்று நான் உயிரோடு இருக்க வேண்டும், அல்லது பயங்கரவாதிகள் இருக்க வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஒன்று நான் உயிரோடு இருக்க வேண்டும், அல்லது பயங்கரவாதிகள் இருக்க வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பதான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தன்னுடய அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்று சரத் பவாருக்கே தெரியாத போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பினார். “ இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட பின், நாங்கள் செய்தியாளர்களை சந்தித்து பாகிஸ்தானை எச்சரித்தோம். அபிநந்தனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் அதைப் பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை. நேரம் வரும் போது அதுகுறித்து பேசுவேன். நான் பிரதமர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. ஒன்று நான் உயிரோடு இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகள் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துவிட்டேன். எனது அரசு மீண்டும் பதவிக்கு வருவது உறுதி. ஆனால் குஜராத்தில் 26 இடங்களில் பாஜக வெற்றி பெறவில்லை என்றால் இது ஏன் நடந்தது என்று மே 23 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் ஆகிவிடும்” என்று தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த 12 ஏவுகணைகளை மோடி தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அமெரிக்காவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஒருவர் அப்போது பேசியதாக மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக தற்போது தாம் எதுவும் கூறப்போவதில்லை என்றும், நேரம் வரும் போது அது குறித்து பேச இருப்பதாகவும் பிரதமர் கூறினார். தேச பாதுகாப்பில் பாஜக அரசு உறுதியுடன் இருக்கிறது என்று தெரிவித்த மோடி, பிரதமர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒன்று பயங்கரவாதிகள் உயிருடன் இருக்க வேண்டும் அல்லது தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.
தேர்தலுக்கு பிறகு அடுத்து மோடி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதை சுட்டிக்காட்டிய மோடி, நாளை தான் என்ன செய்யப் போகிறேன் என்பது சரத்பவாருக்கே தெரியவில்லை என்றால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பினார்.