கர்நாடக விவசாயிகளின் 34,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் அண்மையில்  நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் -  ஜேடிஎஸ் (JDS) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.


இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் -  ஜேடிஎஸ்  கூட்டணியின் முதலாவது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் குமாரசாமி இன்று தாக்கல் செய்தார்.  அப்போது, அவர் நிகழ்த்திய பட்ஜெட் உரையின் போது, பயிர்க்கடன் ரத்து திட்டத்தின் மூலமாக  34,000 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். 


மேலும், 2 லட்சத்திற்கு குறைவாக வாங்கப்பட்டிருந்த விவசாயக் கடன்களும் தள்ளுப்படி செய்யப்படும் எனவும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படுவது உறுதி என்றும் திட்டவட்டமாக கூறினார். குமாரசாமியின் அறிவிப்பால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்த கர்நாடக அரசு உத்தேசத்துள்ளதாக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். மேலும், பெட்ரோல் மீதான வரியை 30 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை 19 முதல் 21 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.


இதன்மூலம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 14 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 12 காசுகளும் உயரும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார். மேலும், மதுபான வகைகள் மீதான வரி 400 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.