தலைநகர் டெல்லியில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற நபர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரக்கமற்ற செயலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


இந்த சம்பவம் பற்றிய விவரம்:- மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ-ரிக்‌ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் 40 வயதுடைய மதிபூல் என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் சென்ற பலரும் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால், மதிபூல் அருகே வந்த ஒரு நபர் அவரது செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். 

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல் அறிந்து காலை 7 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். ஆனால், அதிக அளவு இரத்தப்போக்கு காரணமாக மதிபூல் உயிரிழந்தார்.  ஒன்றரை மணி நேரத்தில் யாராவது ஒருவர் உரிய நேரத்தில் முதலுதவி மற்றும் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்து இருந்தால், ரிக்‌ஷா ஓட்டுநரை உயிருடன் காப்பற்றியிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


விபத்தில் உயிரிழந்த மதிபூல் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் பகல் நேரத்தில் இ-ரிக்‌ஷா ஓட்டுதல், இரவு நேரத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தனது பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், டெம்போ வேன் டிரைவர் மற்றும் செல்போனை எடுத்துச்சென்ற நபர் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.