தங்கள் சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதவர்கள் காஷ்மீர் பிரச்சினையைப் பேசுவதாக பிரதமர் மோடி குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. ஸ்டேடியத்தில் 50 ஆயிரம் இந்தியர்-அமெரிக்கர்கள் பங்கேற்ற "ஹவுடி மோடி" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொடக்க உரையாக முதலில் பேசிய மோடி, டிரம்பின் ஆட்சிக் காலத்தில் இந்தியா- மெரிக்கா இடையே உறவு மேலும் வலுப்பெற்றதாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை டிரம்ப் வலிமை பெறச் செய்திருப்பதாகவும், அவரது தலைமையின் கீழ் அமெரிக்க புதிய உச்சத்தை எட்டும் என மோடி புகழ்ந்துரைத்தார்.


நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய பின், மோடி அரைமணி நேரம் உரையாற்றினார். அப்போது, இந்தியாவும் அமெரிக்காவும் புதிய வரலாறை படைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஹவுடி மோடி என்ற கேள்விக்கு, 8 மொழிகளில் பதிலளித்த மோடி தமிழிலும் இங்கு எல்லாமே சவுக்கியம்தான் என்று கூறினார்.


இந்தியாவின் பன்முகத் தன்மை, பல்வேறு மொழிகள், பலவித கலாச்சாரங்களை புகழ்ந்த மோடி வேற்றுமையில் ஒற்றுமை என்ற மரபு இந்தியாவை பெருமிதப்படுத்துவதாக தெரிவித்தார். அனைவருடனும் அனைவருக்காகவும் என்பதுதான் இந்தியாவின் புதிய தாரக மந்திரம் என்று குறிப்பிட்ட மோடி, நமக்கு நாமே சவாலாக இருக்கிறோம் என்றார்.


370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை குறிப்பிட்ட மோடி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் வளர்ச்சிபெறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் அங்குள்ள மக்களை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த மோடி, இதற்காக எம்.பி.க்களுக்கு பாராட்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த மோடி, சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதவர்கள், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பி வருவதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் 9/11 தாக்குதல், மும்பை 26/11 தாக்குதல் நடத்தியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றார். தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது என்று கூறிய மோடி, இதற்காக அதிபர் டிரம்ப் பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.


அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், இதில் நல்ல பலன் கிடைக்கும் என்றும் தமது பேச்சில் மோடி நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.