பாரளுமன்றத்தில் பிரதமர் மோடியை நான் கட்டித் தழுவியதை காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் விரும்பவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று ஜெர்மனி சென்றடைந்த அவர் ஹம்பர்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, மத்திய அரசின் மீது விமர்சனங்கள் மூலம் பல்வேறு நுணுக்கமான தாக்குதலை நடத்தியுள்ளார். 


ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கூடத்தில் ராகுல்காந்தி பேசுகையில்,.... பாஜக அரசு செயல்படுத்திய மூன்று திட்டங்கள் இந்திய மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது. அந்த மூன்றும், சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் கும்பல்களால் தாக்கப்படுவது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை தான். 



ஆனால், இவ்வாறான வளர்ச்சிக்கு பல ஆபத்துக்கள் உள்ளன. தலித்கள் மற்றும் கீழ் தட்டு வகுப்பினருக்கு இவ்வாறான வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் கிடைக்க கூடாது. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


கீழ் தட்டு வகுப்பினர் மற்றும் தலித் சமூகத்தின் வளர்ச்சிக்காக நடைமுறைப்டுத்தப்பட்ட சட்டங்களை தாக்கி வலிமை இழக்க செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதிவே வன்முறையிலிருந்து தலித்துகள் பாதுகாக்கப்படுகிற சட்டம், உணவு உரிமை சட்டம், வேலைவாய்ப்பு உரிமை சட்டம் போன்றவை தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 



இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கான வளர்ச்சியாக மட்டுமே இல்லாமல், நாடு முழுதும் உள்ள பல்வேறு மொழிகளை பேசும், பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களை உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தை பின்பற்றியே சுதந்திரம் பெற்றது முதலாக கடந்த 2014-ம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சி செய்த முந்தைய அரசுகள் செயல்பட்டன.


எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான், எனவே வன்முறையினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த ஒரே வழி தவறு செய்தவர்களை மன்னிப்பது தான். 



நம் மீது மற்றவர்கள் வெறுப்பை உமிழ்ந்தாலும் பதிலுக்கு நாம் வெறுப்பை தூண்டும் வகையில் பேசக் கூடாது. என் மீது  வெறுப்பை தூண்டும் விதமாக பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அவரைப் போலவே பதிலுக்கு நானும் பேசாமல் இந்த உலகம் மிகவும் மோசமானது அல்ல என்பதை அவரிடம் கூற விரும்பினேன்.


அதற்காகவே அவர் இருக்கும் இடம் சென்று அவரை கட்டித் தழுவினேன். இந்த நற்குணத்தை தான் நாம் மகாத்மா காந்தியிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.


பாராளுமன்றத்தில் நான் பிரதமரை கட்டித்தழுவியது காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் எண்ணத்தை நான் ஆதரிக்கவில்லை என ராகுல் தெரிவித்தார்.