ICICI வங்கியின் முன்னாள் CEO சாந்தா கோச்சாருக்கு எதிராக, அனைத்து விமான நிலையங்களுக்கும் CBI லுக்அவுட் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012ஆம் ஆண்டில் வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. விதிமுறைகளுக்கு மாறாக இந்த கடன் வழங்கப்பட்டதாகவும் அதற்கு கைமாறாக வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத், சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தும் நியூபவர் நிறுவனத்தில் மறைமுகமாக 64 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாக நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு குற்றம்சாட்டியதை அடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் நீக்கப்பட்டார். மேலும் வீடியோகான் கடன்முறைகேடு வழக்கில், சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.


பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட அமலாக்கத்துறையும், சாந்தா கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டே, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ சார்பில் லுக்அவுட் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், சாந்தா கோச்சாருக்கு எதிராக முதல்முறையாக, சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.