இந்தியா - பக்., அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து மோடிக்கு இம்ரான் கான் கடிதம்..!
இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான் கான் கடிதம்..!
இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான் கான் கடிதம்..!
அமெரிக்காவில் இம்மாதம் நடைபெற உள்ள ஐநா.பொதுசபைக் கூட்டத்தில் இந்தியா சார்பில் சுஷ்மா ஸ்வராஜூம், பாகிஸ்தான் சார்பில் மஹ்மூத் குரேஷியும் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இம்ரான் கான் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கடிதத்தில் அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐநா.சபையின் கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தைக்கு எந்த வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற போது பிரதமர் மோடி சார்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்ததையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து ராஜாங்க உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவில் உள்ள சீக்கியர்களுக்காக கர்த்தார்புர் குருதுவாரா வாசலைத் திறக்க பாகிஸ்தான் தயார் என்று சித்து கூறிய நிலையில் அதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.