பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்தது
காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, சர்வதேச நாடுகளின் கோரிக்கை படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும் காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும். இதற்காக இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரக அதிகாரி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது. இந்த அழைப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் அரசிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் வர தயாராக உள்ளார். ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும். காஷ்மீரில் தற்போது நடக்கும் சம்பவத்திற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமே முக்கிய காரணம்.
வெளியுறவு செயலாளர்கள் மத்தியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச முக்கியத்துவம் தர வேண்டும் எனவும், காஷ்மீர் பற்றி எந்த வித பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.