பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுக்க மத்திய அரசு முடிவு!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!
இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80% நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்போது இந்த நதிகள் பாகிஸ்தானுக்கு செல்வதை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது, பின்னர் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலை கண்டித்து மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% சுங்கவரி விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதற்காக கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டப்படும் எனவும், பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதால் யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.