விராட் கோலியை படுகொலை செய்ய முயற்சிக்கிறதா LeT அமைப்பு...
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் குறிவைப்பு(Hit-List) பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் குறிவைப்பு(Hit-List) பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல அரசியல்வாதிகளை குறிவைத்து வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் குறிவைப்பு(Hit-List) பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தைபா, தனது பெயரை அகில இந்திய லஷ்கர்-இ-தைபா என்று மாற்றியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தனது பழிவாங்கும் பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலோர் அரசியல்வாதிகள் என்றாலும், கோலியின் பெயர் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசியல்வாதி பெயர்களுக்கு மத்தியில் ஒரு கிரிக்கெட் வீரர் பெயர், ஒரு பயங்கரவாத அமைப்பின் இலக்காக இருப்பது இது முதல் முறையாகும்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இந்தியா சுற்றுப்பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் வரும் நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை துவங்கி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் காரணமாக டெல்லியில் நடைப்பெறும் இத்தொடரின் முதல் போட்டியில், பாதுகாப்புகள் பலபடுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கடிதம் ஒன்றினை பெற்றுள்ளது. இந்த கடிதத்தில் அனுப்புநரின் பெயர் அகில இந்திய லஷ்கர்-இ-தைபா உயர் சக்தி குழு, கோழிக்கோடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடிதத்தில் தங்களது இலக்காக குறிக்கப்பட்டுள்ளவர்கள் முறையே., பாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி, பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் தலைவர் மோகன் பகவத் மற்றும் கோவா கவர்னர் சத்ய பால் மாலிக் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) NIA அனுப்பியுள்ளதாக செய்தி நிறுவனம் IANS தெரிவித்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை பலப்படுத்திட டெல்லி காவல்துறையினையும் கேட்டுக்கொண்டுள்ளது.
நவம்பர் 2008 மும்பை தாக்குதல்கள் உட்பட இந்தியா முழுவதும் பல பயங்கரவாத நிகழ்வுகளுக்கு லஷ்கர்-இ-தைபா பொறுப்பேற்றுள்ளது மற்றும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் பாதுகாப்புப் படையினரையும் வீரர்களையும் கொன்றதற்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.