நிலவும் குழப்பம்!! இந்திய அரசுக்கு காஷ்மீர் மக்கள் மீது அக்கறை இல்லையா? மெகபூபா முப்தி
`ஸ்ரீநகர் வீதிகளில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது. காஷ்மீர் மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் என மெகபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.
ஸ்ரீநகர்: இந்திய அரசுக்கு அமர்நாத் யாத்திரைகளை பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறதா? காஷ்மீர் மக்கள் தனித்து விடப்படுவது குறித்து எந்த விதமான கவலையும் கிடையாதா? என காஷ்மீர் முன்னாள் முதல்வரர் மெகபூபா முப்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
அமர்நாத் யாத்திரை காரணமாக காஷ்மீரில் அதிக அளவில் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால் கடந்த மாதம் 26-ஆம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு மேலும் 10,000 வீரர்களைப் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசு அனுப்பியது. ஆனால் நேற்றிரவு முதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர் எனவும், மேலும் 28,000 வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நகரின் அனைத்து நுழைவாயில்களும் துணை ராணுவப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியானதால், மக்களை பெரும் அதிர்சியில் ஆழ்த்தியது.
ஆனால் ஜம்மு -காஷ்மீரில் 28,000 வீரர்கள் குவிகப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை எனவும், கடந்த ஜூலை 26-ஆம் தேதி மட்டும் 10000 கூடுதல் வீரர்களை அனுப்பியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திடீரென அளவுக்கு அதிகமான வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் நடைமுறையில் உள்ள சிறப்புச் சட்டப் பிரிவு 35A- வை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதனால் அங்கு எந்தக் கலவரமும் ஏற்படாமல் இருக்கவே அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது அந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வாய்ப்பில்லை எனவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மிகப்பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதன் காரணமாகவும் அந்தப் பகுதியில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று அமர்நாத் யாத்திரையை முடித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. மறுபுறம் காஷ்மீரில் இருந்து விமானங்கள் மூலம் கேம்ப் வாரியாக அமர்நாத் யாத்திரைகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது நடைபெறு வரும் சம்பவங்களை வைத்து பார்த்தால், காஷ்மீர் மாநிலத்தில் முக்கியமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது என்பது தெரிகிறது. ஆனால் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக தான் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியை சேர்ந்த மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரில் நிலவி சூழல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது, "ஸ்ரீநகர் வீதிகளில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது. ஏடிஎம், பெட்ரோல் பங்க், அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க பல இடங்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள். ஆனால் இந்திய அரசுக்கு அமர்நாத் யாத்திரைகளை பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறதா? காஷ்மீர் மக்கள் தனித்து விடப்படுவது குறித்து எந்த விதமான கவலையும் கிடையாதா? என்று மிகவும் கடுமையாக சாடியுள்ளார்.