இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் வரும் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாதம் மற்றும் உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017, ஏப்ரல் மாதம் மரண தண்டனை வழங்கியது. குல்புஷனுக்கு தூதரக ரீதியிலான உதவியை பாகிஸ்தான் மறுத்ததால், இந்தியா அதே 2017 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றம் எனப்படும் ஐசிஜே -வை ( International Court Of Justice) அணுகியது. 


இது தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பொருத்தமற்ற விசாரணையையும் இந்தியா எதிர்கொண்டது. அதே ஆண்டு மே 18 ஆம் தேதி, வழக்கின் தீர்ப்பு வரை குல்புஷனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று ஐசிஜே உத்தரவிட்டது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரியில் ஐசிஜே 4 நாட்கள் பொது விசாரணையை மேற்கொண்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் விவரங்களும், பதில்களும் அளிக்கப்பட்டன. 


அப்போது ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மேலும் இது பொருத்தமற்ற வழக்கு என்பது போன்ற வாதங்களை இந்தியா முன்வைத்தது. எனினும் பாகிஸ்தான் ஜாதவ் ஒரு உளவாளி என்பதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் வரும் ஜூலை 17 ஆம் தேதி ஐசிஜே தீர்ப்பு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்தது.