INX Media case: கைது செய்யப்படலாம்? சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ குழு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஒருவேளை அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்யாமலிருக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை வந்தது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியது. இதனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால், அதிகாரிகள் திரும்பி சென்றனர்.