பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் சுமார் 130 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 


ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்., இந்திர ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்திய அரசு தெரிவித்தது.


ஆனால், பாகிஸ்தான் அரசு எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது.


நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் புல்வாமா தாக்குதல் விவகாரம் எதிரொலித்தன. காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருப்பதாக கூறப்பட்டது. மேலும், நரேந்திர மோடி விளம்பரத்திற்காக ராணுவ தாக்குதலை பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.


இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், குறிப்பிட்டு சொல்லப்படும் இடத்தில் எந்த தாக்குதலும் நடைபெற்றது போன்ற அறிகுறி இல்லை என பிரபல செய்திநிறுவனம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சந்தேகம் வலுத்தது.


இந்தநிலையில், தற்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரான பிரான்செஸ்கா மரினோ, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியன்று இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் 130 - 170 ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 


மேலும், தாக்குதலுக்கு உள்ளான சுமார் 45 பேர் வரை ஷின்கியாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி அவர் இந்த விவரங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாத பயிற்சியாளர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் முகாம் இருந்த இடம் சீலிடப்பட்டு இப்போது வரைக்கும் யாருக்கும் அனுமதி அளிக்கப்பட வில்லை. மாறாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட பகுதி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.