ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் ரம்ஜான் மாதமான ஜூன் மாதத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு, மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் ஜூன் மாதத்தில், அங்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-வில் தற்போதைய குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே மக்களவை தேர்தலுடன் இம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட போது ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


இந்நிலையில், வரும் ஜூன் மாதம் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மத்திய உள்துறை அமைச்சகம், மாநில நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன், நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு கட்டமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்தலாம் எனவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தீவிரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் போன்றவற்றின் காரணமாக, சட்டசபை தேர்தலை ஜூன் மாதம் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இப்போது கிடைத்துள்ள தகவல்கள்படி, ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு ஜூன் 4-ஆம் தேதி வாக்குப் பதிவை துவங்கி ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்தி, அமர்நாத் யாத்திரை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஜூலை 1-ஆம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


ஜூலை 3-ஆம் தேதியுடன் குடியரசு தலைவர் ஆட்சிக்கான காலக்கெடு, ஜம்மு காஷ்மீரில், முடிவுக்கு வர நிலையில் ஜூன் மாதத்திற்குள்ளாக தேர்தல் வேலைகளை முடித்துவிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.