குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கியது. மொத்தம் 61 மணி நேரம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 78 சதவீதம் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்றுள்ளன. முத்தலாக் உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29-ம் தேதி கூட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். 


வரும் 29-ம் தேதி காலை 11 மனியளவில் பாராளுமன்ற மைய அரங்கில் இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.  இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் அவரது உரையில் இடம்பெறும். ஜனவரி 30, 31-ம் தேதி விடுமுறைக்கு பின்னர் பிப்ரவரி முதல் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. 


பிப்ரவரி முதல் தேதி 2018-ம் ஆண்டுக்கான பொது வரவு-செலவு (பட்ஜெட்) அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மொத்தம் 31 அமர்வுகளாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.