தமிழகம் உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1 ஆந்திரவில் பணியாற்ற கைலாஷ் சத்யார்த்தி விருப்பம்!
நோபல் விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அமராவதியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். அப்போது, ஆந்திரத்தில் குழந்தைகள் நலனுக்கான திட்டங்களில் பணியாற்ற விரும்புவதாக கைலாஷ் சத்யார்த்தி விருப்பம் தெரிவித்தார். மேலும் அரசின் அம்மா ஒடி திட்டத்துக்கு தனது பாராட்டை தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் ஜெகன் அரசு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாயை ஏழை தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பயன்படுத்துவதற்காக வழங்குகிறது.


2 டார்ஜீலிங்கில் மம்தா ஹாய் டூர்!
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டார்ஜீலிங்கில் இன்று குளிரை அனுபவிக்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது… இன்றைக்கும் அவர் வீதி உலா வந்தபோதும் அது குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கான போராட்டத்துக்காக அல்ல… மாறாக, பொதுமக்களுடன் அவர் கூடி குலாவ வந்தார். அப்போது அங்கிருந்த கடைக்காரர்களிடம் அவர் பேசினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்மையாக பதில் சொல்லவேண்டுமென அவர்களிடம் வலியுறுத்தினார். இதனிடையே அந்த வழியாக குழந்தைகளுடன் வந்தவர்களிடம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதா என்று கேட்டார். அவர்கள் இல்லையென்று கூறியதும் உடனடியாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வரவழைத்து அவரே புகட்டினார். மேலும் குளிரை தாங்குவதற்கு ஸ்வெட்டர்களையும் தந்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். முதல்வர் மம்தாவின் இந்த இயல்பை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவரும் குஷியாக காணப்பட்டார்.


3 உ.பி.யில் மாவட்டவாரியாக புண்ணிய தலங்கள்!
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 13 முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு மிகப் பெரிய சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி விபத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தர யோகி அரசு முடிவெடுத்துள்ளது. விவசாயிகள் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படும்.
இந்நிலையில் உதய் யோஜனாவின் கீழ் கடன்களுக்கான அரசுக் கட்டணத்தில் ஆயிரத்து 784 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுராவில் உள்ள புண்ணியதலமான பரிக்ரமாவுக்கு புதிய சாலை அமைக்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எல்லா மாவட்டங்களிலும் புண்ணிய தலங்களை மேம்படுத்த உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.


4 ஆறு மணிநேரம் காத்திருந்த கேஜ்ரிவால்!
தில்லி பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாளான செவ்வாய்க்கிழமையன்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்காக சுமார் 6 மணிநேரம் வரை கேஜ்ரிவால் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருக்கு முன்னதாக 25க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். இதனிடையே பாஜக அமைச்சர் சதியில் செய்வதாகக் கூறி ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்படவிருந்த டம்மி வேட்பாளர் பெயர், கேஜ்ரிவாலின் வேட்புமனுவிலிருந்து நீக்கப்பட்டது.


இதனிடையே ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மறுத்துள்ளார். மேலும் அன்னா ஹசாரே இயக்கத்தை சேர்ந்த புரட்சிகர இளைஞர்கள் ஏராளமானோர் புதுதில்லி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் புதுதில்லி தொகுதியில் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் சுனில் யாதவும், காங்கிரஸின் ரொமேஷ் சபர்வாலும் களம் இறங்கியுள்ளனர்.


5 ஆன்டிஇந்தியன் கோஷமிட்டால் தண்டிப்பு!
குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக லக்னோவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமீத் ஷா, எதிர்க்கட்சியினரை கடுமையாகத் தாக்கிப்பேசினார்.


சிஏஏவுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மோடியின் அரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என திட்டவட்டமாக அவர் அறிவித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ஜேஎன்யூவில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்படுவதாகவும் அப்படி செய்பவர்களை தண்டிக்க வேண்டாமா என கூட்டத்தினரிடையே கேள்வி எழுப்பினார். குடியரிமை சட்டத்துக்கு ஆதரவாக லக்னௌவில் நடைபெற்ற ஆறாவது கூட்டத்துக்கு முன்பாக ஆமதாபாத், ஜோத்பூர், தில்லி, ஜபல்பூர், வைஷாலி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அமீத் ஷா உரையாற்றினார்.
 
6 உணவு சப்ளையில் ஜொமாட்டா விஸ்வரூபம்!
உணவு சப்ளை தொழிலில் அமெரிக்க நிறுவனமான ஊபர் ஈட்ஸ் உடன் ஜொமாட்டோ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி ஜொமாட்டோவின் 9.99 சதவீத பங்கை ஊபர் வாங்கியுள்ளது. இதன் பங்கு 35 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் 2500 கோடி ரூபாய் ஆகும்.
ஊபர் ஈட்ஸ் தனது ஹோட்டல் வாடிக்கையாளர்கள், டெலிவரி ஒப்பந்தங்களை இனி ஜொமாட்டோ மூலம் செயல்படுத்தும். உணவு சப்ளை தொழிலில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து ஊபர் இந்த முடிவை எடுத்துள்ளது. ஊபர் ஈட்ஸை பெற்றதன்மூலம் ஜொமாட்டோவின் சந்தை இப்போது 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் தொழில் சுமார் 48 சதவீத பங்கை வகிக்கும் ஸ்விகி இதில் முன்னிலையில் உள்ளது.


7 குறைகிறது பெட்ரோல் டீசல் விலை!
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறையத் தொடங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள பதற்றநிலையினால் உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்துவரும்நிலையில் இந்தியாவில் சூழ்நிலை வேறாக உள்ளது. செவ்வாய்க்கிழமையன்று பெட்ரோல் டீசல் விலை கணிசமாகக் குறைந்தது.
தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகளும், டீசல் 21 காசுகளும் குறைந்தன. அதேபோல மும்பையில் பெட்ரோல் விலை 16 காசுகளும் டீசல் 22 காசுகளும் குறைந்தன. நோய்டா, குருகிராம், கொல்கத்தா, சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் லிட்டருக்கு 15 முதல் 25 காசுகள் குறைந்தன.


8 மக்களை மிரட்டும் பணவீக்கம்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்ததால் சாமானிய மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்தபோதிலும் காய்கறிகள் விலையேற்றத்தால் சாப்பாடுச்செலவு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இதேபோல காய்கறிகள் விலை உயர்ந்தால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில், ஜனவரியில் பணவீக்கம் 8 சதவீத்தை எட்டும் எனக் கூறப்பட்டுள்ளது. டிசம்பரில் பணவீக்கம் சுமார்7.35 ஆக இருந்தது. அது இந்த மாதத்தில் 8 சதவீதத்தை எட்டும். வரும்நாட்களில் காய்கறிகள் விலை குறைந்தாலும் பணவீக்கம் இப்போதைக்கு குறையாது என்பது இதன்மூலம் தெரிகிறது.


9 முதலீட்டுக்கு இந்தியா நம்பர் 4!
பொருளாதார மந்தநிலையால் நாடு இக்கட்டை சந்தித்துவரும் சூழ்நிலையில் உலகில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது ஆறுதலைத் தருகிறது.


உலகளாவிய பெரு நிறுவனங்களைப் பொருத்தமட்டில் இந்தியாவில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை ஈட்டும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார யூனியன் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக முதலீட்டுக்கு சிறந்த நாடு இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பெரு நிறுவனங்களின் தலைவர்களில் 45 சதவீதம் பேர் சீனப் பொருளாதாரத்தின் மீதும் 40 சதவீதம் பேர் இந்தியாவின் மீது முதலீட்டுக்கான நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்.


10 எதிர்த்தாலும் வாபஸ் கிடையாது-ஷா
பிரதமர் மோடி உள்பட அனைத்து மூத்த அமைச்சர்களும் குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குடியரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது முஸ்லிகளுக்கு விரோதமானது அல்ல என்றும் இதன்மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும் மத்திய அரசு விளக்கி வருகிறது.


இந்நிலையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, சிஏஏவுக்கு எதிராக எத்தனைப் போராட்டங்கள் நடைபெற்றாலும் அதை திரும்பப் பெறப் போவதில்லை என கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சியினரால் சிஏஏ குறித்து அவதூறு கூறுவதாக அமீத் ஷா தெரிவித்தார்.


11 நேபாளத்தில் கருகிய 8 இந்தியர்கள்!
நேபாளத்தில் ஒரு ரிசார்ட் அறையில் எரிவாயு கசிந்ததால் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு இந்திய சுற்றுலா பயணிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர் ... ரிசார்ட்டின் அறையில் மயக்க நிலையில் காணப்பட்ட இந்த இந்திய பிரஜைகள் ஹாம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மக்வான்பூர் காவல் கண்காணிப்பாளர் சுஷில் சிங் ரத்தோர் தெரிவித்தார். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.  இதுபற்றி ரிசார்ட்டின் மேலாளரின் கூறுகையில், இவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அறை சூடாக இருக்க ஹீட்டர் இயக்கப்பட்டது. மொத்தம் நான்கு அறைகள் சுற்றுலாப் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எட்டு பேர் ஒரு அறையிலும், மீதமுள்ளவர்கள் மற்ற அறையிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் உள்ளே இருந்து பூட்டப்பட்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக மேலாளர் கூறினார் ..


12 FATF-யிடம் மண்டியிட்ட பாக்.!
FATF நடவடிக்கையை தவிர்க்க பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது ... இன்று சீனாவில் தொடங்கிய FATF கூட்டத்தில் பாகிஸ்தான் செய்த தவறான செயல்களால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி தொடர்பான 22 முக்கிய செயல் திட்டங்களின் பட்டியலை பாகிஸ்தான் FATF க்கு ஒப்படைத்து  தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் ...


பாகிஸ்தான் ஏற்கனவே சாம்பல் பட்டியலில் உள்ளது. அதிலிருந்து வெளியேற அந்நாட்டுக்கு ஜனவரி வரை அவகாசம் இருந்தது. ...
பாக்கிஸ்தானின் நடவடிக்கையில் FATF திருப்தி அடையவில்லை என்றால், அதை கறுப்புப் பட்டியலில் சேர்க்கலாம் ... FATF உடனான சந்திப்புக்கு முன்னர் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற்றுமாறு பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


13 சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்பு!
விமானத் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலேமானி கொல்லப்பட்டதிலிருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் ஈரான் மீண்டும் அமெரிக்க தூதரகம் மீது 3 ஏவகணைகளை  வீசியுள்ளது.
இராக்கின் பசுமை மண்டலத்திற்குள் ஈரான் வீசிய மூன்று ராக்கெட்டுகளில் உயிர்களோ, சொத்துக்களோ சேதமடையவில்லை… அதே நேரத்தில், வன்முறை தாக்குதலை அமெரிக்கா உறுதி செய்துள்ளதோடு ஈரானின் கைவரிசை என குற்றம்சாட்டியுள்ளது.


14 வெள்ளத்தை வேடிக்கை பார்த்ததால் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஒரு பாலம் இடிந்து விழுந்ததில்  குறைந்தது ஒன்பது பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.  மேலும் ஒருவரை காணவில்லை. சம்பவ இடத்திலிருந்து பதினேழு பேர் மீட்கப்பட்டுள்ளனர் ...
சுமார் 30 பேர் கொண்ட கூட்டம் பாலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள்… வெள்ளத்தைக் காண பாலத்தில் கூடியிருந்தபோது நிகழ்ந்த திடீர் விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பாலம் ஏற்கனவே பலவீனமாக இருந்தது என்றும் விவசாயிகள் அதை பயன்படுத்தி வந்தனர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


15 இலங்கையின் சாதனை இரட்டையர்கள்!
இலங்கையில் அதிக இரட்டையர்கள் வாழும் சாதனையை மீண்டும் நிரூபிக்கும் முயற்சி நடக்கிறது. இதில் 12,492 பேர் கணக்கிடப்பட்டனர் ... கடந்த முறை இந்த பதிவு 8 ஆயிரத்துக்கு சென்றது ... இந்த முறை இந்த சாதனையை முறியடிப்பார்கள் என்று அமைப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்காக இந்த முறை அதிக குழந்தைகளை தேர்வு செய்துள்ளனர். கின்னஸ் உலக சாதனைக் குழுவும் அந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு இரட்டையர்களை எண்ணுவதற்கு உதவியது…
இலங்கையில் அதிக அளவில் இரட்டையர்கள் இருப்பதால் நாட்டு மக்கள் பெருமிதம் அடைவதாக கூறப்பட்டுள்ளது.


16 வௌவால்களை காக்கும் இதயதெய்வம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜென்னி டேவிஸ் என்ற பெண்மணி கடந்த 8 ஆண்டுகளாக அரிய வகை வௌவால்களைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறார் ... அங்குள்ள  காடுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தீவிபத்தில் இருந்து, அவரது பொறுப்பு அதிகரித்துள்ளது.தனது வாழ்க்கையில் இவ்வளவு காடுகள் நெருப்பில் சிக்கி அழிந்ததைக் கண்டதில்லைஎன்று ஜென்னி டேவிஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்த அரிய வெளவால்களின் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்து வருகிறது.
தீ விபத்துக்குப் பிறகு, அவற்றின் எண்ணிக்கை மேலும் குறைந்துவிட்டது. காடுகளில் வெளவால்களின் எண்ணிக்கை குறைந்து வரும்நிலையில் .. ஜென்னியின் சரணாலயத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


17. நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு:
நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 உறுப்பினர்களைக் கொண்ட டீம் இந்தியாவை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயமடைந்த ஷிகர் தவானுக்கு மாற்றாக பிருத்வி ஷா ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


18. ஐசிஐசிஐ ஏடிஎம்மில் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: 
அட்டைகள் இல்லாமல் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தியது. இந்த வசதியின் கீழ் பரிவர்த்தனை வரம்பு ஒரு நாளைக்கு ரூ.20,000 ஆக இருக்கும். இந்த தகவலை வங்கி (ICICI) இன்று அறிவித்தது. இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கியின் 15,000 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். 


19. வேலூர் கூட்டு பாலியல் பலாத்காரம்:
வேலூரில் 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு நபர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். கத்திமுனையில் மூன்று ஆண்கள், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


20. மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம்:
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை என்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.