காஷ்மீர்: 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில சோபோர் நகரப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷங்கர்கன்ட் பிரத் கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் குப்வாராவுக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.
அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். கைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வன்முறை பரவாதவாறு பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.