நடுரோட்டில் நீதிபதியின் மனைவி, மகனை சுட்டுத் தள்ளிய காவலர்....
குருகிராமில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
குருகிராமில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
அரியானா மாநிலம் குருகிராமில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குருகிராம் ஆர்காடியா சந்தை பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும், மகனும் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது, திடீரென அவர்களுக்கு பாதுகாப்புக்கு இருந்த காவலரே துப்பாக்கியால் சுட்டார்.
இதனால், படுகாயமடைந்த நீதிபதியின் மகனை தூக்கி அந்த காவலர் காரில் ஏற்ற முயற்சிப்பதும், ஏற்ற முடியாததால் காரை ஓட்டிக் கொண்டு செல்வதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நீதிபதியின் மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் (Dhruv) ஆகியோரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், ரீத்து உயிரிழந்த நிலையில், அவரது மகன் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்ட பாதுகாவலர் மஹிபால் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளியான மகிபால் சிங் நீதிபதி கிருஷ்ணகாந்த் வீட்டில் 2 ஆண்டுகளாக பணியில் இருந்துள்ளார். அவரை நீதிபதியின் குடும்பத்தினரர் தரக்குறைவாக நடத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான மகிபால் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.