அயோத்தி சர்ச்சைகுறிய நிலம் தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதி UU லலீத் விலகியதை அடுத்து வழக்கின் விசாரணை வரும் ஜன., 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சர்ச்சை காரணமாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலத்தை மூன்றாக பிரித்து ராமர் கோவில், இஸ்லாமிய வக்ஃபு வாரியம், நிர்மோகி அகரா இந்து அமைப்பு ஆகியவற்றுக்கு பிரித்து வழங்க நீநிமன்றம் உத்தரவிட்டது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தன.



இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்பின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றுவிட்டார். இதன் காரணமாக அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.


இந்தநிலையில் அயோத்தி வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்க முன்பு நியமித்தது. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த அமர்வு வழக்கை இன்று விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், நீதிபதி யு.யு. லலித் அயோத்தி தொடர்பான மற்றொரு வழக்கில் அப்போதைய உ.பி. முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக வாதாடியதை நினைவு கூர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து தான் விலகுவதாக நீதிபதி UU லலித் தெரிவித்தார். இதனையடுத்து புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டியது நிர்பந்தம் ஏற்பட்டதால், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் 4 பேரும் தெரிவித்தனர்.