கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்கிழமை(இன்று) விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் கசிந்தன.


33 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல் கட்டமாக 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனவும், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அசோக், மாதுசாமி, ஈஸ்வரப்பா பசவராஜ் பொம்மை, உமேஷ் கத்தி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டது.


இந்நிலையில் 17 பேர் பெயர் கொண்ட பரிந்துரை பட்டியலை முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ளார். இப்பட்டியலில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அசோக், மாதுசாமி, ஈஸ்வரப்பா பசவராஜ் பொம்மை ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.



கர்நாடகாவில் அமைச்சர்கள் யாரும் இல்லாததால் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற 3 அமைச்சரவை கூட்டங்களிலும், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் மழைவெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.