கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக MLA-களுடன் எடியூரப்பா ஆலோசனை
பாஜக சட்டசபையில் ஒரே இரவில் நடந்த `தர்ணா`வுக்குப் பிறகு, பிற்பகலுக்குள் வாக்களிக்கும் வாய்ப்பு..!
19 July 2019, 10:20 AM
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் மாநில பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பாவுடன் சந்திப்பு நடத்த உள்ளனர்.
19 July 2019, 09:10 AM
பெங்களூரு சட்டசபையில் கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா பாஜக எம்.எல்.ஏ சுரேஷ்குமாருடன் காலை உணவு சாப்பிடுகிறார்.
19 July 2019, 08:37 AM
விடிய விடிய சட்டசபையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சர்கள் இன்று காலை சட்டசபை வெளியில் நடை பயிற்சி நேர்கொண்டனர்...
பாஜக சட்டசபையில் ஒரே இரவில் நடந்த 'தர்ணா'வுக்குப் பிறகு, பிற்பகலுக்குள் வாக்களிக்கும் வாய்ப்பு..!
கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்தார். விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வேண்டுமென்றே விவாதத்தை நீட்டித்து பல மணி நேரமாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் கட்சித் தாவல் சட்டம் குறித்து பேசி தாமதம் ஏற்படுத்தியதால், பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் அவசரத்தில் இருப்பதாக சாடினார்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தெளிவுபடுத்தும் வகையில், விளக்கம் கேட்டுப் பெறும் வரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவருமான சித்தராமையா வலியுறுத்தினார். ராஜினாமா கடிதம் அளித்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள், 2 சுயேட்சைகள், நாகேந்திரா மற்றும் ஸ்ரீமந்த் பாட்டீல் ஆகிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு பாஜக எம்எல்ஏ, ஒரு பிஎஸ்பி எம்எல்ஏ என 21 பேர் நேற்று சட்டப்பேரவைக்கு வரவில்லை.
கடும் அமளிகளுக்கு இடையே சட்டப்பேரவை இன்று காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய்வாலா அறிவுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்டது. ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் 15 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆளும் கூட்டணியின் பலம் 101 ஆகக் குறைந்துவிடும். பாஜகவின் பலம் 2 சுயேச்சைகள் ஆதரவுடன், 107 ஆக உள்ளது.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், குமாரசாமி அரசு கவிழ்ந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் செய்த பாஜக எம்.எல்,ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை இங்கிருந்து செல்லப் போவதில்லை என்று தெரிவித்த எடியூரப்பா, விதான் சவுதா வளாகத்திலேயே நேற்றிரவு படுக்கையை விரித்து உறங்கினார். பாஜக எம்.எல்.ஏக்களும் கையோடு போர்வை படுக்கையை எடுத்து வந்து, அங்கேயே படுத்துக் கொண்டனர்.