கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு... 80-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் கோவில் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்ட 11 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே, டிக்கியூரில் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை சாப்பிட்ட 11 பேர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். சுமார் 80-க்கும் மேற்பட்டோர் மைசூர், சாம்ராஜ்நகர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உண்ட 60 காகங்களும் உயிரிழந்தன. 


கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கணவன்- மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மைசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் குமாரசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பிரசாதத்தில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கோவிலை தற்காலிகமாக மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரசாதத்தில் விஷம் கலந்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.