கர்த்தார்புர் செல்லும் 575 யாத்ரீகர்களை கொண்ட பட்டியலில் சிங், கேப்டன் அமரீந்தர்!
கர்தார்பூர் செல்லும் குழுவில் மன்மோகன், பஞ்சாப் முதல்வர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்!!
கர்தார்பூர் செல்லும் குழுவில் மன்மோகன், பஞ்சாப் முதல்வர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்!!
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புர் செல்லும் முதல் பக்தர்கள் குழு குறித்த பட்டியலை இறுதி செய்து பஞ்சாப் மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்பத் கவுர், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், பஞ்சாப் எம்பிக்கள், எம்,எல்.ஏக்கள் உட்பட என மொத்தம் 575 நபர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். நீண்ட இழுப்பறிக்கு பின், கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.
அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தின் மூலம் இந்தியர்கள் விசா இல்லாமல் கர்தார்பூர் சென்று வரலாம். அதன்பின், பரஸ்பர உடன்பாட்டின் பேரில் இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய எல்லை வரையிலான இந்த வழித்தடத்தை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில், கர்தார்பூர் செல்லும் முதல் பக்தர்கள் குழு குறித்த பட்டியலை பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்பத் கவுர், பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங், பஞ்சாப் எம்பிக்கள், எம்,எல்.ஏக்கள் என மொத்தம் 575 பேர் இடம் பெற்றுள்ளனர்.