பிரதமர் மோடியை காஷ்மீர் எதிர்க்கட்சி குழு சந்திப்பு
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 45 நாட்களாக நடந்துவரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேற்று முன்தினம் மாநில எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அந்த குழுவினர் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியை உமர் அப்துல்லா தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்தது. அப்போது, பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய குறிப்பாணை ஒன்றையும் பிரதமர் மோடியிடம் உமர் அப்துல்லா தலைமையிலான குழு அளித்தது. மேலும், காஷ்மீர் பிரச்சினைக்கு தாமதமின்றி விரைவில் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவும், ஆயுத படைகளை பயன் படுத்துவதை உடனே நிறுத்தவும் பிரதமரிடம் வலியுறுத்தினர்.