இன்று துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதம் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முழுமையான கடைசி தொடர் இது என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக ஏதுவாக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பினை நாடி நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தினார் பிரதமர் மோடி. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கட்சிகள் எழுப்பும் சமூகநலன் சார்ந்த பிரச்சினைகளை அரசு வரவேற்கும் எனவும் அவர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார். 


இதைப்போல மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கி அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று கூட்டினார்.


இக்கூட்டத்தில் பேசிய அவர், சபையை சுமுகமாக நடத்துவதற்கு உதவி மற்றும் உறுதுணையாக இருக்குமாறு அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதில் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சமமான பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.


இக்கூட்டத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு அமைக்க எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. அதேவேலையில் CBI போன்ற விசாரணை நிறுவனங்களை அரசு தவறாக பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பபடும் எனவும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என சிவசேனா பிரதிநிதி சந்திரகாந்த் கைரே வலியுறுத்தியுள்ளார். தவறும்பட்சத்தில் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வரும் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக முத்தலாக் அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய மசோதாக்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.