கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்புணர்வா? ஏன் மரபணு சோதனை முக்கிய ஆதாரம்?
Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Kolkata Doctor Rape Murder Case Latest News Updates: கொல்கத்தாவில் அரசால் நடத்தப்படும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இந்த வழக்கு கொல்கத்தா போலீசாரிடம் இருந்து தற்போது சிபிஐ வசம் உள்ளது. இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தன்னை தூக்கில் கூட இடுங்கள் என்றும் சஞ்சய் ராய் கூறியதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும், இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் மட்டுமின்றி மேலும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது.
வட்டமடிக்கும் பல்வேறு சந்தேகங்கள்
மருத்துவமனையில் போதைப் பொருள் புழக்கத்திற்கு தொடர்புடையவர்கள் குறித்து உயிரிழந்த பெண் புகார் அளிக்க இருந்ததால், அதில் தொடர்புடைய பலரும் சேர்ந்து அவரை திட்டமிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து 150 கிராம்/மில்லி கிராம் அளவுக்கு விந்தணு இருந்ததாக பெண்ணின் பெற்றோர் சட்ட ரீதியாக தங்களது சந்தேகத்தை கிளப்பிய நிலையில், உடற்கூராய்வு அறிக்கை அது உண்மை இல்லை என்பதை நிரூபித்தது.
உயிரிழந்த பெண்ணின் டைரியின் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பது, மருத்துவமனை தரப்பில் முதலில் பெண் உயிரிழந்த தகவலை தற்கொலை என சொல்லியது, மருத்துவமனையின் முதல்வரை அங்கிருந்து பணியிட மாற்றம் செய்தது உள்ளிட்ட பல கேள்விகள் இந்த வழக்கை சுற்றி வட்டமடித்துக்கொண்டே இருந்தன. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரித்து வந்தாலும், உச்ச நீதிமன்றமும் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அரசை கடுமையாக சாடியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் ராய் பிடிபட்டது எப்படி?
இந்த கேள்விகளும், சந்தேகங்களும் ஒருபுறம் இருக்க சஞ்சய் ராய் பிடிபட ஆதாரமாக இருந்தது அவரின் ப்ளுடூத் ஹெட்போன்தான். ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருக்கும் கருத்தரங்கு அறையில், வெள்ளிக்கிழமை (ஆக. 9) காலையில்தான் அரை நிர்வாண நிலையில் பெண் மருத்துவரின் உடலை சக ஊழியர்கள் கண்டெடுத்தனர்.
அந்த அறையில் போலீசார் தடயங்களை தேடியபோது, தனியாக ஒரு ஹெட்போன் போலீசாருக்கு கிடைத்தது. சம்பவம் நடந்த அன்று அதிகாலை 4 மணியளவில் அந்த கட்டடத்திற்கு சஞ்சய் ராய் காதில் ஹெட்போன் உடன் வருவது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னர் அவர் வெளியேறிய போது அந்த ஹெட்போன் அவரது காதில் இல்லை. போலீசாரிடம் கிடைத்த ஹெட்போன் சஞ்சய் ராயின் மொபைலில் இணைக்கப்பட்டிருந்தது அது அவருடையதுதான் என்பதையும் உறுதிப்படுத்தியது. இதுதான் அவரை கைது செய்வதற்கான ஆதாரமாக இருக்கிறது.
வழக்கின் முக்கிய ஆதாரம் இதுதான்
எனினும், தற்போது சஞ்சய் ராய் மட்மின்றி மேலும் சிலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், உயிரிழந்த பெண்ணின் உடலிலும், சஞ்சய் ராய்க்கும் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனை என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பெண்ணின் உடலில் சஞ்சய் ராயின் மரபணுவை தவிர்த்து வேறு மரபணுக்கள் கண்டெடுக்கப்பட்டால் இதில் மற்றவர்களுக்கு தொடர்பிருக்கிறது எனலாம். ஒருவேளை, அப்படி ஏதும் இல்லாவிட்டால் சஞ்சய் ராய் மட்டுமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியாகும்.
தற்போது இந்த மரபணு சோதனையின் மாதிரிகள் சிபிஐயின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் (CFSL) செயலாக்கப்பட்டு வருகின்றன. மரபணு சோதனையின் முழுமையான அறிக்கை விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு உளவியல் சோதனை மேற்கொள்வதும், பாலிகிராபி சோதனை மேற்கொள்வதும் இந்த வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும். எனினும், இவை நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ