கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஷில்லாங்க CBI அலுவலகத்தில் ஆஜர்...
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக ஷில்லாங் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது!
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக ஷில்லாங் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது!
மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக சாரதா நிதி நிறுவனம் மீது புகார் உள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக ராஜீவ்குமார் செயல்பட்டார். வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் சிறப்பு விசாரணை அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான சில ஆவணங்களை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆதாரங்கள் சிலவற்றையும் ராஜீவ் குமார் அழித்துவிட்டதாக சி.பி.ஐ குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனை தொடர்ந்து ராஜீவ் குமாரை விசாரிக்கச் சென்ற போது சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் சிறை பிடித்தனர். பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை சி.பி.ஐ உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது. இதனை தொடர்ந்து கொல்கத்தா காவல் ஆணையர் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் அவரை கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
கொல்கத்தாவிற்கு பதில் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து ராஜீவ்குமாரை விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.