குல்பூஷண் ஜாதவ் மனைவியின் காலணிகளில் ``ஏதோ இருந்தது`` பாகிஸ்தான் வெளியுறவுத்துறை!!
குல்பூஷண் ஜாதவ் மனைவியின் காலணியில் ஏதோ இருந்ததாகவும் பாதுகாப்பு காரணமாக அது கைப்பற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி கைது செய்தது. பிறகு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கடந்த 8-ம் தேதி வழக்கு தொடுத்து குல்பூஷண் ஜாதவிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை தடை செய்ய வேண்டும் என இந்தியா வாதிட்டது.
ஆனால், வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் வாதிட்டது.
இரு நாட்டின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதை தொடர்ந்து,குல்பூஷண் ஜாதவை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளோ, அவருடைய மனைவியையோ மனிதாபிமான அடிப்படையில் சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை என்றும் இந்தியா குற்றம் சாட்டியது.
இதைத் தொடர்ந்து குல்பூஷண் ஜாதவ் மனைவி மற்றும் அவருடைய தாயாருக்கு அண்மையில் பாகிஸ்தான் விசா வழங்கி அவர்கள் சந்திப்பதற்கும் அனுமதி அளித்தது.
பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் பிறந்தநாளான டிசம்பர் 25-ந்தேதி அன்று சந்திப்பதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு ஜாதவ் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி இருவருக்கும் வழங்கியது.
இதையடுத்து இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் குல்பூஷன் ஜாதவை மனைவி மற்றும் தாயார் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பு முடிந்தவுடன் உடனடியாக அவர்கள் இந்தியா திரும்பினர்.
இதை தொடர்ந்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க சென்ற குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டதாகவும்,குல்பூஷண் ஜாதவை பார்ப்பதற்கு முன் அவரது மனைவியின் வளையல், தாலியை பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குல்பூஷண் ஜாதவ் மனைவியின் நெற்றில் இருந்து பொட்டையும் அதிகாரிகள் அகற்றி உள்ளனர் மேலும் அவரது காலணியையும் பறித்துக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மத் பைசல் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு மீது பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் அந்த காலணி இயல்பை விட வேறு மாதிரியாக இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.