PNB Fraud Case: வெளிநாடு தப்பிய நிரவ் மோடி வங்கிக்கு கடிதம்!
பஞ்சாப் நேஷனல் வங்கி அவசரப்பட்டு விட்டது: கடனை அடைக்காமல் வெளிநாடு தப்பிய நிரவ் மோடி கடிதம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிரவ் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகத்துக்கு அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- எனது நிறுவனங்கள் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.5,000 கோடிக்கும் குறைவுதான். இந்த கடன் விவகாரத்தை வங்கி அவசரப்பட்டு வெளிப்படுத்தி புகார் அளித்ததன் மூலம் எனது நிறுவனத்தின் பெயர் கெட்டுவிட்டது, எனது தொழிலிலும் அழிந்துவிட்டது. என்னிடம் இருந்து கடனைத் முறையாகத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டது.
வங்கி சார்பில் அவசரப்பட்டு அளிக்கப்பட்ட புகார்களாலும், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்பான செய்திகளால் பல்வேறு விசாரணை அமைப்புகள் உடனடியாக எனது நிறுவனங்களில் சோதனை, சொத்து பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. இதனால் எனது வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன.
எனக்கு கடன் உத்தரவாதம் அளித்ததற்காக பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணத்தை வங்கிக்கு நான் கட்டணமாக செலுத்தியுள்ளேன். உள்நாட்டில் உள்ள எனது தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.6,500 கோடியாகும்.
அவற்றை விற்பனை செய்தால் கூட வங்கிக்கு நான் செலுத்து வேண்டிய கடனை முடித்துவிட முடியும். ஆனால், இப்போது அதற்கான காலம் கடந்துவிட்டது.எனது மனைவி, மாமா மற்றும் சகோதரருக்கு நான் நடத்தி வரும் தொழிலில் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கும், வங்கிகளுக்கும் இடையில் உள்ள நிதி விவகாரங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அவர்களது பெயரிலும் தவறாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனது நிறுவனத்தில் பணியாற்றும் 2,200 பேருக்கு எனது நடப்புப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து ஊதியம் வழங்க வங்கி அனுமதிக்க வேண்டும்” என அந்தகடித்ததில் அவர் தெரிவித்துள்ளார்.