மம்தாvs சிபிஐ சர்ச்சை: லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஒத்திவைக்கப்பட்டது
இன்றும் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்ற சிபிஐ அதிகாரிகளை நேற்று கொல்கத்தா போலீசார் சிறைப்பிடித்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
இதனையடுத்து சிபிஐ மூலம் மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் எனக்கூறி மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இன்று மூன்றாவது நாளாக தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. அவருக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிபிஐ மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இடையே ஏற்ப்பட்டுள்ள மோதல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், மத்திய அரசு சிபிஐ அமைப்பை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்துகிறது என்றுகூறி இன்றும் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகளின் எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நண்பகல் வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.