பேசுவது புதிய இந்தியாவை பற்றி.. ஆனால் வாக்குறுதிகள் எல்லாமே பழசு: அதிர் ரஞ்சன்
மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது `புதிய பாட்டிலில் பழைய ஒயின்` என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முதல் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மக்களவையில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், நடுத்தர மக்களுக்கு பயன் பெரும் வகையில் திட்டங்களை அறிவித்தார். கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்திருந்தார். அதேவேலையில், பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் மீதான வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளது.
2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதிய பாட்டிலில் பழைய ஒயின்" என்று குறிப்பிட்டார். பட்ஜெட்டில் எதுவும் புதிதல்ல என்று கூறினார். பழைய விஷயங்கள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு உள்ளன. புதிய இந்தியாவை பற்றி பேசுபவர்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாமே பழசாக இருக்கிறது என கூறியுள்ளார்.